தமிழுக்கு வந்த சோதனை
இதுவரை எந்த ஒரு தமிழகக் கட்சியும் செய்யாத புதிய முயற்சியைத் தற்போதைய திமுக அரசு கையில் எடுத்தது. தமிழ் மொழியில் மவிவிச கல்வியைக் கொண்டு வருவோம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கைசோதனை முயற்சி வெளியிட்டார் தமிழக முதல்வர். அதன் தொடர்ச்சியாக, சில மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சமீபத்தில் வெளியிட்டனர். ஆனால், அந்த மருத்துவ நூல்களால் தமிழ் மொழி முன்னேற்றம் அல்லது பெருமை அடைந்ததா? என்றால் அதுதான் இல்லை. அந்த மருத்துவ நூல்கள் தமிழுக்குப் பெரும் சோதனையாகவே அமைந்தன.
மவிவிச மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய அவற்றைப் பல மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆங்கில வழியில் மவிவிச மருத்துவக் கல்வியைப் பயின்ற மருத்துவர்கள் எப்படித் தமிழில் சரியாக மொழிபெயர்ப்பு செய்வார்கள் என்று சிறிதும் யோசிக்காமல் இப்பணியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளது திமுக அரசு. தமிழ் இலக்கணமோ மொழிநடையோ அறியாத இந்த மருத்துவர்களிடம் மொழிபெயர்ப்புப் பணியை ஒப்படைத்ததன் விளைவு?. ஏராளமான எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகள் என்று பிழைகளால் மலிந்த மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளன இந்த மவிவிச மருத்துவ நூல்கள்.
இந்த நூல்களில் காணப்படும் ஏராளமான பிழைகளைப் பற்றி ஒரு மருத்துவரே விமர்சனம் செய்துள்ளார். கு. கணேசன் என்ற பொதுநல மருத்துவர் இந்து நாளிதழில் 2 நவம்பர் 2024 அன்று நூல்வெளி பகுதியில் தமிழக அரசு மொழிபெயர்த்து வெளியிட்ட பல நூல்களுள் ஒன்றான கைட்டன் & காலின் மருத்துவ உடற்செயலியல் என்ற நூலைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
Ø சிறுநீரக மண்டலம் பகுதியில் கலைச்சொல்லாக்கத்தைக் கையாண்டதில் நிறையத் தடுமாற்றங்கள் தெரிகின்றன.
Ø ஆங்கிலப் பதிப்பு நூலின் துணை கொண்டுதான் இவற்றைப் படிக்க முடியும்.
Ø இந்தப் பகுதியில் அலகுகளைக் குறிப்பிடும் எழுத்துருக்கள் திருத்தப்பட வேண்டும்.
Ø ஏற்கெனவே வழக்கத்தில் உள்ள மருத்துவத் தமிழ்ச்சொற்களை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் அப்படியே வழங்கிச் சறுக்கி இருக்கிறார்கள்.
Ø பல சொற்களைத் தவறாகவும் வழங்கி இருக்கிறார்கள்.
Ø தமிழுக்கு இனிமை சேர்க்கும் உம்மையைப் பயன்படுத்தாததால் இலக்கணப் பிழையாக அமைவதுடன் வாசிப்பின் வேகமும் குறைகிறது.
Ø PHYSIOLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மருத்துவர் உடலியல் என்றும் இன்னொருவர் உடலியங்கியல் என்று இன்னொருவரும் உடற்செயலியல் என்று மற்றொருவரும் பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற வெவ்வேறு கலைச்சொல் பயன்பாடுகள் மாணவர்களிடையே தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும்.
Ø அட்டைப் பக்கம் தொடங்கி, நூல் முழுவதிலும் எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், சந்திப் பிழைகள், வாக்கியப் பிழைகள் மற்றும் நிறுத்தற் குறியீட்டுப் பிழைகள் பரவலாகக் காணப்படுகின்றன.
சரி, இந்த பிழைகளுக்கும் குழப்பங்களுக்கும் என்ன காரணம்?. அதற்கான விடைகளையும் அந்த மருத்துவரே கூறுகிறார்.
" நவீன மருத்துவக் கலைச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவும் வகையில் ஒரு முழுமையான மருத்துவக் கலைச்சொல் அகராதி தமிழில் இல்லை. மணவை முசுதபாவின் மருத்துவக் களஞ்சியப் பேரகராதி, மருத்துவர் சாமி சண்முகம் தொகுத்துள்ள மருத்துவக் கலைச்சொற்கள், சென்னைப் பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வெளியீடான கலைச்சொல் அடைவு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் அறிவியல் சொல்லகராதி, ப.அருளி தொகுத்த அருங்கலைச்சொல் அகரமுதலி மற்றும் தமிழக அரசின் சொற்குவை.காம் - இவை தான் தற்போது மருத்துவச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவர உதவுபவை. ஆனால் இவையும் முழுமையாக இல்லை.
அதுமட்டுமின்றி, நவீன மருத்துவச் சொற்கள் கிரேக்க, இலத்தீன மொழிகளின் அடிப்படையில் தான் பெரும்பாலும் இருக்கும். இயற்சொற்கள், மரபுவழிச் சொற்கள், சிறப்புச் சொற்கள், ஒப்புமையாக்கச் சொற்கள், பயன்பாட்டுச் சொற்கள் என மருத்துவ மொழிபெயர்ப்பில் சொற்களைத் தேடித்தேடிப் பெயர்க்க வேண்டும். அவை தமிழ் இலக்கணத்துக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். இந்த மொழிபெயர்ப்பில் பல்வேறு மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி உள்ளனர். இவர்கள் ஓய்வில்லாத மருத்துவப் பணிகளுக்கு இடையில் தான் இப் பணியைச் சிரமேற் கொண்டனர் என்பது முக்கியம். "
இவருடைய விமரிசனத்தில் இருந்து ஒரு விசயம் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டு விட்டதால், மருத்துவப் பாடநூல்களை உருவாக்க புதிய வரைமுறைகளை வகுக்காமல், அவசர கோலத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தனைப் பிழைகள் மற்றும் குழப்பங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த நூல்கள் யாருக்கும் பயன்படாமல் போவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதைப் போல, மற்ற நூல்களிலும் இதுபோன்ற பிழைகளும் குழப்பங்களும் மிகுந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. எனவே வெளியிடப்பட்ட அத்தனை நூல்களையும் மீள் அச்சிற்கோ பயன்பாட்டிற்கோ கொண்டுவராமல் முதலில் நிறுத்த வேண்டும்.
